சிலாங்கூரிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புப் பிரச்சனைகள் :
நாங்கள் கேட்பது வீடு மட்டுமே
Oleh: Yuvarajan Subramaniam ,B Sc(Hons)(Physics,UM)
அனைவருக்கும் வணக்கம்.125-வது மேதினத்தைக் கொண்டாடும் இத்தினத்தில் அனைவருக்கும் மேதின வாழ்த்துகள் என சொல்லி என் உரையைத் தொடங்க வேண்டுமென்பது எனக்கும் ஆசைதான். வியர்வையைக் கொட்டி உழைப்பால் இவ்வுலகை கொழிக்க வைக்கும் தொழிலாளி இன்னும் வசிக்க ஒரு வீடு கேட்டுப் போராட வேண்டிய அவல நிலையில் உள்ள இந்நாட்டில் அவ்வாறு வாழ்த்துகள் சொல்ல என் நா தடுமாறுகிறது.
என் பேச்சைத் தொடங்குவதற்கு முன் உங்களிடம் ஒரு கதையைச் சொல்லி விடுகிறேன்.25 ஆண்டுகளுக்கு முன் நான் சுங்கைப்பட்டாணியில் உள்ள ஸ்கார்புரோ பிரிவு 4 தோட்டத்தில் என் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தேன்.
எங்கள் தோட்டத்தில் ஒரு தொழிற்சங்கத் தலைவர் இருந்தார்.ஒவ்வொரு வருட மேதினத்தின் அன்றும் மலேசியாக் கொடியைக் கம்பத்தில் ஏற்றி ‘நெகாராகு’ பாடியப் பின்னர் எங்களுக்குச் சாப்பிட மிட்டாய் வழங்குவார்.பிறகு தொழிலாளர்களின் உழைப்பைப் பற்றி பத்து நிமிடம் உணச்சிக்கரமாக உரையாற்றுவார். உழைப்பின் குறைந்த பட்ச பலன் கூட உழைப்பாளிகளைச் சேர மாட்டேன் என்கிறதே ?என வேதனைக் குரலுடன் முடியும் உரை அது.அச்சிறு வயதில் அவரது ஆற்றாமையின் வீர்யத்தை நான் அறிந்ததில்லை.வழங்கப்பட்ட மிட்டாய்களை வாயில் மென்றப்படி இருப்பேன்.
எங்கள் தோட்டத்தில் ஒரு தொழிற்சங்கத் தலைவர் இருந்தார்.ஒவ்வொரு வருட மேதினத்தின் அன்றும் மலேசியாக் கொடியைக் கம்பத்தில் ஏற்றி ‘நெகாராகு’ பாடியப் பின்னர் எங்களுக்குச் சாப்பிட மிட்டாய் வழங்குவார்.பிறகு தொழிலாளர்களின் உழைப்பைப் பற்றி பத்து நிமிடம் உணச்சிக்கரமாக உரையாற்றுவார். உழைப்பின் குறைந்த பட்ச பலன் கூட உழைப்பாளிகளைச் சேர மாட்டேன் என்கிறதே ?என வேதனைக் குரலுடன் முடியும் உரை அது.அச்சிறு வயதில் அவரது ஆற்றாமையின் வீர்யத்தை நான் அறிந்ததில்லை.வழங்கப்பட்ட மிட்டாய்களை வாயில் மென்றப்படி இருப்பேன்.
அவரைப் பற்றி என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.அவருடைய பெயர் திரு.பெரியண்ணன்.இன்றையத் தலைவர்கள் எல்லாம் எத்தனை வெள்ளி?என கேட்கும் நேர்மை அவரிடம் அதிகம் இருந்ததாம். பால்மரம் சீவும் தொழிலாளர்களுக்கு வேலை சொல்லி தருவதோடு அவர்களுக்கு நேரும் தொழில் சார்ந்த பிரச்சனைகளை உடனுக்குடன் தோட்ட நிர்வாகத்திடம் சொல்லி தீர்த்து வைப்பவராக இருந்தார். நெடுநாள் வேலை செய்வபவர்களுக்குக் கிடைக்கும் இளமரத்தைக் கூட இவர் தன் மனைவிக்கு இறுதிவரை வாங்கி தந்ததில்லை.
ஒரு முறை அவர் சோர்வோடு வீடு திரும்பி தன் நண்பர்களோடு வேதனையோடு பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்.சுங்கைப்பட்டாணியில் நடந்த தோட்டத் தொழிற்சங்க ஆண்டு கூட்டம் முடிந்து திரும்பியிருந்தார்.அவர் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த விடயத்தின் சாரம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.தோட்டத் தொழிற்சங்கத்தின் அப்போதைய செயற்பாடுகளில் அவர் மிகவும் அதிருப்தியுற்றிருந்தார்.தோட்டத்தை விட்டு வெளியேறும் தொழிலாளர்களுக்கு குறைந்தப்பட்ச மலிவு வீடுகளையாவது தோட்ட நிர்வாகங்கள் கட்டித் தர வேண்டுமென சொல்லிக் கொண்டிருந்தார். வெறும் சில ஆயிரங்கள் வெள்ளி இழப்போடு பட்டணத்திற்குத் துரத்தப்டும் தொழிலாளிகள் எப்படி தங்கள் வாழ்வை முறையாகத் தொடர முடியும் ?பட்டணத்தில் புதிய வேலை சூழலில் அவர்கள் எப்படி தங்களைச் சரியாக பொருத்திக் கொள்வார்கள் ? தொழிலாளர்களின் எதிர்காலத்தை வழிநடத்த வேண்டிய தொழிற்சங்கத் தலைவர்கள் முதலாளிகளிடம் விலை போய் இப்படி தொழிலாளர்களை நடுத் தெருவில் விட்டு விட்டார்களே என வருந்தினார். அவர் வேறு யாருமல்ல. 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட என் தாத்தாதான்.
என் தாத்தாவின் வேதனை புலம்பலைக் கேட்டு 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.இந்த 21-ஆம் நூற்றாண்டின் 11 வருடங்கள் கழிந்தப் பின்பும் இன்னும் தோட்டத் தொழிலாளர்கள் மாதச் சம்பளத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.மேம்பாடுகளைக் காரணமாகச் சொல்லி சொற்ப இழப்பீடுகளுடன் அவர்களை தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.சரி தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு கட்டாயமாக வீடமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றத்தான் வேண்டுமா ?4 தலைமுறைகளாகத் தோட்டத்தில் உழைத்தப் பிறகு தற்போது வெளியேற்றப்படும் தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய உண்மை நிலையை ஆராயும் முன் சட்ட அமைப்பு ரீதியாக இத்தொழிலாளர்களுக்கு நிறைவேற்றப்பட்ட சலுகைகளை கொஞ்சம் பார்ப்போம்.
1973-ல் நம் நாட்டின் இரண்டாவது பிரதமரும் நடப்பு பிரதமரின் தந்தையுமான துன் அப்துல் ரசாக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சொந்தமான வீட்டு திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழ் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகமே வீடுகளைக் கட்டித் தரும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிலாங்கூரில் உள்ள 1976-ல் சை டார்பி நிறுவனத்திற்குச் சொந்தமான தென்னைமரம் தோட்டத்தில் 108 வீடுகளும், கெடா பத்து பெக்காகா தோட்டத்தில் 230 வீடுகளும், பேராக் டோவென்பி தோட்டத்தில் 110 வீடுகளும் கட்டப்பட்டன. இத்தோட்டத்தில் வாழ்ந்தவர்கள் இவ்வீடுகளை மலிவான விலையில் வாங்கி பயனடந்தனர்.
1995-ல் அப்போதைய மனிதவளத் துறை அமைச்சர் டத்தோ லிம் ஆ லேக் , விற்கப்படும் அல்லது மேம்படுத்தப்படும் தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் வெறுமனே வெளியேற்றப்படாமல் வீடமைப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதன் அடிப்படையில் சில மாநில அரசுகள் குறிப்பாக சிலாங்கூர் மற்றும் ஜொகூர் மாநில அரசுகள் கொள்கை(Policy) ரீதியாக இவ்வேண்டுகோளை நிறைவேற்ற ஒப்புக் கொண்டன. கிளந்தான் மாநில அரசு அவ்வாறு வெளியேற்றப்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு நிலங்கள் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
1991-ல் தான் சிறி முகமட் தாய்ப் மாநில முதல்வராக இருக்கும்போது தோட்டங்கள் மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும்பொழுது அங்கு வாழ்ந்த தொழிலாளிகளுக்கு மாற்று வீடுகள் கட்டாயமாகக் கட்டித் தரப்பட வேண்டுமென கூறினார்.
இப்படி தலைவர்களெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு வீடு தர வேண்டுமென்று கர்ஜித்துக் கொண்டிருக்க தொழிலாளர்களின் உண்மை நிலை என்னவென்று பார்த்தால் பெருத்த ஏமாற்றம்தான். தொழிலாளர்களைக் கதறக் கதற கழுத்தைப் பிடித்து வெளியேற்றும் முதலாளிகளின் நடவடிக்கைகளைக் கண்கள் பொத்திக் கொண்டு பாராதவாறு இருப்பது தான் உண்மை நிலையாக இருக்கிறது.
இக்கட்டுரையில் சிலாங்ககூர் மாநிலத்தில் மட்டும் கடந்த 15 வருடங்களில் தோட்டங்களிலிருந்து வெளியேற முதலாளிகளால் நோட்டீஸ் வழங்கப்பட்ட தோட்டங்கள் குறித்தும் அவர்களின் வீட்டுரிமைக் குறித்த நிலையையும் பார்வையிடுவோம்.
1. செமிஞே தோட்டம்.
இத்தோட்டத்தில் இன்றிருப்பவர்கள் இங்கு 20 முதல் 50 ஆண்டுகள் வரை அங்கு வாழ்ந்து தோட்டத்தில் உழைத்தவர்கள். இன்னும் 16 குடும்பங்கள் அங்கிருக்கும்போதே கடந்த 1 ஏப்ரல் 2004-ல் அவர்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி தோட்ட நிர்வாகமான கோல்டன் ஹோப் நோட்டீஸ் வழங்கியது. இந்நோட்டீஸ் வழங்கும்போது தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திற்கும் கோல்டன் ஹோப்பிற்கும் இடையில் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடந்து முடிந்திருந்தன. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே நோட்டீஸ் வழங்கும் அளவுக்குத் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நிலை பலவீனமாக இருந்தது என்றோ அல்லது தோட்டத் தொழிலாளிகளின் நிலையை உறுதியாகச் சங்கம் எடுத்து தெரிவிக்க வில்லை என்றுதானே அர்த்தம். நிலைமை இவ்வாறிருக்க பிப்ரவரி 2008-ல் தோட்ட நிர்வாகம் அத்தோட்டதில் இருக்கும் பொது மண்டபம் மற்றும் தேவாலயம் குறித்து பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் தேவாலயத்தின் சார்பில் பேச வேண்டியவர்கள் வர தவறியதால் பேச்சுவார்த்தை முட்டுகட்டை நிலையை அடைந்தது.
2. கிலேங்கோவ்ரி தோட்டம்
இன்னும் 9 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கும் தோட்டமான கிலோங்கோவ்ரியில் தொழிலாளர்களைத் தோட்டத்தை விட்டு வெளியேற்றும் நோட்டீஸை கடந்த ஜனவரி 2005-ல் தோட்ட நிர்வாகமான கோல்டன் ஹோப்பால் வழங்கப்பட்டது. ஆனால் இது குறித்து தொழிலாளர்களிடம் எவ்வித பேச்சுவார்த்தையை இந்நிர்வாகம் நடத்தவேயில்லை.கிட்டதட்ட 50 வருடங்களுக்கு மேலாக இங்கு தங்கி வேலை செய்துக் கொண்டிருப்பவர்களை வெறுமனே வெளியேறச் சொல்வது நியாயமா?ஜூலை 2007-ல் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடும், கோவிலும் இழப்பீட்டுத் தொகையாக ரி.ம 7000-மும் தர ஒப்புக் கொண்டது.இருப்பினும் இன்று வரை எவ்வித மேல் நடவடிக்கைகள் தோட்ட நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான விடயம்.
3. டுனெடின் தோட்டம்
16 குடும்பங்கள் இன்னும் தங்கியுள்ள இத்தோட்டத் தொழிலாளர்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக இங்குப் பணிபுரிபவர்கள். இன்னும் இவர்கள் வெளியேற்றும் நோட்டீஸ் வழங்கப்படாவிட்டாலும் 1997-ல் இத்தொழிலாளர்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டித் தரச்சொல்லி தேசிய தோட்டத் தொழிற்சங்கள் தோட்ட நிர்வாகத்திடம் கோரியது. 3 ஏபரல் 1999-ல் மீண்டும் இக்கோரிக்கையைத் தோட்ட நிர்வாகத்திற்கு நினைவுப்படுத்தி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்தது.செவிடன் காதில் ஊதிய சங்காய் இன்னும் கோரிக்கை கிடப்பில் இருப்பதுதான் மிச்சம்.
4. அபாக்கோ தோட்டம்
70 ஆண்டுகளுக்கு மேலாக இத்தோட்டத்தில் வாழ்ந்த உழைத்த தொழிலாளர்களில் இன்னும் 10 குடும்பங்கள் மிஞ்சியிருக்கின்றனர்.இவர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேறச் சொல்லி இன்னும் நோட்டீச் வழங்கப்படவில்லை.கடந்த 16 ஏப்ரல் 2001-ல் டத்தோஶ்ரீ ச.சாமிவேலு இத்தோட்டத்திற்கு வருகைப் புரிந்து இம்மக்களின் பிரச்சனையைக் கேட்டுணர்ந்தார். அப்போது அவர் அம்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பின்வறுமாறு :
அ) தாசிக் கெசுமா வீடமைப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
ஆ) ரிஞ்சிங் பகுதியில் இம்மக்களுக்கு மலிவு விலை வீடுகள் கிடைக்க சாமிவேலு தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தைத் தொடர்புக் கொண்டு ஏற்பாடு செய்வார். வீடுகள் வாங்க உதவிப் பணத்தை வீடமைப்பு அமைச்சிடம் இருந்தும் சேமநிதி வாரியத்திடம் இருந்தும் பெறப்படும் என்று கூறியுள்ளார்.அதோடு தோட்ட நிர்வாகமும் அத்தொழிலாளர்களுக்கு இழப்பீடாக ரி.ம 20000-மும் தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்.எல்லா கோரிக்கைகளுக்கு இல்லாத பதிலோடு சேர்ந்து இவை அனைத்தும் 10 வருடங்கள் கழிந்தப் பின்பும் இன்னும் கிடப்பிலேயே இருக்கின்றன.
5. பாங்கி தோட்டம்.
இன்னும் 28 தொழிலாளர் குடும்பங்கள் தங்கியுள்ள பாங்கி தோட்டத்திலிருந்து வெளியேறத் தோட்ட நிர்வாகமான கோல்டன் ஹோப் 2000-ஆம் ஆண்டில் நோட்டீஸ் வழங்கியது. இதனைத் தொடர்ந்து தோட்ட நிர்வாகமான கோல்டன் ஹோப்பிற்கு எதிராகத்தொழிலாளர்களைப்பிரதிநிதித்துத் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தொழிலாளர்களுக்கு முறையான இழப்பீட்டை வழங்க வேண்டுமென உத்தரவிட்டது, இருப்பினும் கோல்டன் ஹோப் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. 2007-ல் காஜாங் ஊராட்சி மன்றம் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளோடு நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு 44 வீடுகளும் கோவிலும் கட்டித் தருவதாக உறுதியளித்தது. வழக்கம் போல் 4 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
6. தும்போக் தோட்டம்.
பந்திங் பகுதியில் இருக்கும் இத்தோட்டத்தின் நிர்வாகம் மஇகாவிற்குச் சொந்தமானதாகும்.இத்தோட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தும் வேலை செய்தும் வந்த தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தக் கடிதம் கடந்த 2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.இத்தோட்டத்தை மைக்காவிடமிருந்து ஜி-டீம் என்ற நிறுவனம் வாங்கி விட்டப் பிறகுதான் இந்நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கப்படும்போது தொழிலாளர்களுக்குப் புதிதாக மலிவு விலை வீடு கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் அவர்களுக்கு வீடும் கிடைக்காமல் இருப்பதோடு அவர்களை மிரட்டி வெளியேற்றும் வேலைகளும் நடந்து வருவதாக அறியப்படுகிறது. தங்களுக்கு எதிராக விடப்படும் மிரட்டல்களை எதிர்த்து கடந்த டிசம்பர் 2010 சில தொழிலாளர்கள் போலிஸ் புகார் செய்திருக்கின்றனர். மற்ற இனத்தினர்தான் இந்தியத் தொழிலாளர்களுக்கான உரிமையைக் கொடுக்காமல் விரட்டுகிறார்களென்றால் இந்தியர்களின் பிரதிநிதிகள் எனச் சொல்லப்படும் மஇகாவின் கீழ் உள்ள நிறுவனமே இப்படி நடந்துக் கொள்வது வேதனைதான்.
7. புக்கிட் ஜாலில் தோட்டம்.
1800 ஏக்கர் பரப்பில் இருந்த புக்கிட் ஜாலில் தோட்டம் 1980-களில் மேம்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விலை உயர்ந்த அடுக்கு மாடி வீடுகளும், கோல்ஃப் திடல்களும், புக்கிட் ஜாலில் விளையாட்டு அரங்கமும் கட்டப்பட்டது இப்போது இன்னும் எஞ்சி இருப்பது 26 ஏக்கர்தான். அதில் இந்த முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் கேட்கும் நிலம் வெறும் 4 ஏக்கர் மட்டுமே.அதை அவர்களுக்குக் கொடுப்பதில் என்ன பிரச்சனை?நீண்ட காலமாக அங்கு வசித்த அந்த மக்களுக்கு ஏன் அங்கேயே நிலம் கொடுக்கக் கூடாது?இதில் என்ன முரண்பாடு?
நமது நாட்டின் வளர்ச்சி என்பது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பாலும் தியாகத்தாலும் உருவானதாகும்.1980-வரை, ரப்பர் மற்றும் செம்பனையில் வரும் வருமானம்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது.
நமது நாடு செழிப்பாகவும், தோட்ட நிர்வாகங்கள் கோடிக் கணக்கில் இலாபம் ஈட்டியதற்கும் காரணமாக இருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு மிஞ்சியது வறுமைதான்.வறுமைக் கோட்டிற்கும் குறைவாகச் சம்பளம் பெற்று, பின்னோக்கிய சம்பள அமைப்பில்தான் இன்னும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு நான்கு ஏக்கர் நிலத்தைக் கொடுக்கத் தடையாக உள்ளக் காரணங்களை அரசு தரப்பினர் சொல்லியுள்ளனர் அவை பின்வருமாறு:
1. பெரும்பாலான மக்கள் அடுக்குமாடி வீடுகளுக்குக் குடிப் போய்விட்டனர்; இப்போது நிலம் கேட்பவர்கள் ஒரு சிறும் பகுதியினரே ஆவர்.
2. கோலாலம்பூரில் நிலம் கொடுப்பது சாத்தியமானதல்ல
3. இது ஒரு நல்ல முன்மாதிரியாகாது.
இதற்கான பதிலை இப்பிரச்சனையை ஒட்டி நீண்ட காலமாக போராடிவரும் மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின்(PSM) செயலாளர் திரு. அருட்செல்வன் இப்படி பதிலுரைக்கிறார்:
1. பெரும்பாலான மக்கள் அடுக்குமாடி வீடுகளுக்குக் குடிப் போய்விட்டனர்; இப்போது நிலம் கேட்பவர்கள் ஒரு சிறும் பகுதியினரே ஆவர்
அண்மையில் நடந்த ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், டத்தோ ராஜா நோங் சிக் (கூட்டரசு பிரதேச அமைச்சர்), ஒப்புக் கொண்டது என்னவென்றால், முன்பு புக்கிட் ஜாலில் தோட்டத்தை விட்டு வெளியேறிய 71 பேரில், வெறும் 10 பேர்தான் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களாவர். மற்ற 61 பேர் புறம்போக்குவாசிகள்.ஆனால், மீதி இன்னும் போராடிக் கொண்டிருக்கும் 39 பேர் இன்னமும் தோட்டத்தில்தான் இருக்கின்றனர்.
இதில் தெளிவுப்படுகிறவிடயம் என்னவென்றால், பெரும்பான்மையானமுன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் இன்னமும் தோட்டத்தில்தான் இருக்கின்றனர்.ஆனால், ஒரு துணை அமைச்சர் இந்த உண்மையை மறுத்து மறைத்து மக்களைக் குழப்பி அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்துகின்றார்.உதாரணம், இப்போது புக்கிட் ஜாலில் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கொடுப்பதாகக் கூறும் பண வகையிலான நஷ்டஈடு, அங்கு இன்னும் தங்கியிருக்கும் 41 குடும்பமும் வெளியேறினால்தான், வெளியேறிவிட்ட மற்றவர்களுக்கும் வழங்கப்படும் என்ற தந்திரத்தைக்கையாளுகின்றார். அதனால், அந்தப் பணத்தை பெறுவதற்கு அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் பல பொய் பித்தலாட்டங்களைச் செய்து வருகின்றனர்.
எது எப்படியிருப்பினும், முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமே (பின்பு வந்த குத்தகை தொழிலாளர்களுக்கு அல்ல) நிலம் கொடுப்பதால் எந்த பிரச்சனையும் வந்து விடாது.காரணம் அவர்களில் பெரும்பாலோர் அதே நிலத்தில்தான் இன்னும் இருக்கின்றனர்.ஆகவே, பிரச்சனையைச் சுலபமாகத் தீர்த்து விடலாம்.
2. கோலாலம்பூரில் நிலம் கொடுப்பது சாத்தியமல்ல
26 ஏக்கரில் வெறும் 4 ஏக்கர் கொடுப்பது சாத்தியமாகாதா?
3. இது ஒரு நல்ல முன்மாதிரியாகாது
எது தவறான முன்மாதிரியாகும்?தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிலம் தருவதா?கம்போங் புவா பாலா விஷயத்தில், தனியார் நிலத்தில் மக்களுக்கு நில உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று ம.இ.கா மன்றாடியது.ஆனால், அதையே அரசாங்க நிலத்தில் செய்வதற்குத் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்.பினாங்கில் பாக்காத்தான் அரசாங்கம் அங்குள்ள மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.ஏன் ம.இ.கா இங்கேயும் அதே வாதத்தை முன்வைக்கவில்லை?
இறுதியாகக் கிடைத்தத் தகவல் படி தொழிலாளர்களிடமிருந்து மீட்டு எடுத்துக் கொள்ளும் அந்த நான்கு ஏக்கரில் இஸ்லாமிய இடுகாடு எழுப்பப் பயன்படுத்தப் போவதாக தகவல் வந்துள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஓர் உண்மை புலப்படுகின்றது. செத்த பிணங்களுக்கு இந்நாட்டின் அரசு வழங்கும் மரியாதையைவிட, அக்கறையைவிட வாழுகின்ற இந்நாட்டின் வளப்பத்திற்கு பாடுபட்டு ஓய்ந்து போனவர்களுக்கு இல்லை.
எனக்கு சிறுவயதில் மே தினத்தன்று தேசிய கீதம் பாடி முடித்ததும் வழங்கப்படும் தாத்தாவின் மிட்டாய் நினைவுக்கு வருகிறது.அதுபோல இந்நாட்டிற்கு விசுவாசமாய் உழைத்தவர்களுக்கு பொது தேர்தல் தோறும் அரசியல்வாதிகள் ‘வாக்குறுதி மிட்டாய்களை’ வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.மக்களும் 60 வருடங்களாக இம்மிட்டாய்களை மென்றுக் கொண்டே இருக்கிறார்கள்.இதைத் தவிர இத்தொழிலாளிகள் வசிக்க ஒரு காணி நிலத்தைக் கூட இவர்கள் தர மாட்டார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
நன்றி :
1. Jawatankuasa Sokongan Masyarakat Ladang (JSML-JERIT).
2. S. Arutchelvan (Setiausaha kehormat, PSM)
0 comments:
Post a Comment